ஒரு மேடையில் அமீரை பேச விடாமல், ரஞ்சித் தமிழ் தேசியம் என்ற வாதத்தை ஏற்க மறுக்கிறார், அவர் கூறும் காரணம், சாதியை ஒழிப்பதில் மும்முரம் காட்டாமல், தமிழ் தேசியம் உருவாகாது என்பதே.
இதுதான் யதார்த்தம். ரஞ்சித்தை கொச்சை படுத்தி பேசுவதால், தமிழ் தேசியம் மலர்ந்துவிடாது என்ற யதார்த்தம் புரியாதவராக அரசியல் களம் அண்ணன் சீமானை மாற்றிவிட்டது.
அண்ணன் சீமான் கூறுகிறார், தலித் பெண்ணான அனிதாவுக்காக படையாச்சி பிள்ளைகள் போராடுகிறார்கள், தேவர் பிள்ளைகள் போராடுகிறார்கள், நாடார் பிள்ளைகள் போராடுகிறார்கள் என்று, இதைத்தான் ரஞ்சித் கண்டிக்கிறார்.
நான் வேறு ஜாதி, ஆனால், நான் உனக்காக போராடுகிறேன், என்று கூறுவது எப்படி தமிழ் தேசிய வென்றெடுப்பாக மாறும்?? நாம் நமக்காக போராடுகிறோம் என்று கூறாத ஏற்றத்தாழ்வுள்ள சமூகத்தில், ஒரு தலித் எப்படி தன்னை இணைத்துக் கொள்ள முடியும்??
ரஞ்சித் மிக தெளிவாக சொன்னார், தலித் வாழ்விடங்களில், அண்ணா தெரு, எம்.ஜி.ஆர்.தெரு, காமராஜர் தெரு, பெரியார் தெரு இருக்கிறது, ஆனால், தலித் அல்லாத மக்கள் வாழும் ஒரு வாழ்விடத்திலாவது, அம்பேத்கார் தெரு உள்ளதா? கக்கன் தெரு உள்ளதா? இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய கல்வி தந்த செல்வம் டாகடர் அம்பேத்கரையே ஜாதிய அடையாளமாக பார்க்கும் தமிழ் சமூகத்தில் தமிழ் தேசியம் எப்படி சமத்துவ சமூகத்தை உண்டாக்கும். தமிழ் தேசியத்தில் தலித்துக்கள் இணைய தயார் ஆனால், அண்ணன் சீமான் அவர்களே சாதியற்ற ஒரு ஊரை தமிழ் தேசியம் உருவாக்கும் என்ற ஒரு உத்தரவாதத்தை. உங்களால் தர முடியுமா? வன்னியர்கள் தமிழர்கள் தானே, ஆனால் அவர்களை தனித்தே வைத்து அரசியல் நடத்தும் ராமதாஸை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
முதலில் சாதிய அடையாளத்தை ஒழிப்போம் தமிழ் தேசியம் தானாகவே மலரும்.
நான் தமிழ் பார்ப்பான்,
நான் தேவர்
நான் நாடார்
நான் படையாச்சி
நீங்கள் தலித்துக்கள்
ஆனால் நாம் தமிழ் தேசியத்தை அமைப்போம் என்பது எப்படி முழுமையான மகிழ்ச்சியை தலித்துக்களுக்கு தரும். 2000 ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட சமூகம் இன்னும் தரமான கல்வியை கூட பெற முடியாத சமூகம் எப்படி முழு மகிழ்ச்சியடையும்???
சாதியத்தை உடைப்போம் அண்ணன் சீமானின் தமிழ் தேசிய கனவு தானாகவே மலரும்.
நான் ரஞ்சித்தின் ஆதரவாளன் அதற்காக சீமான் அண்ணனை யதார்த்தம் தெரியாத பைத்தியக்கார பயல் என்று கீழ்த்தரமாக கூறமாட்டேன். ஏனென்றால் நான் தமிழ் தேசியம் மலர காத்திருக்கும் நாகரீகமான தமிழன்.
ஆனால் அண்ணன் அவரை தவிர எல்லாரையும் பைத்தியக்காரன் என்பார் என்ன தமிழனோ...